கரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாறிய பள்ளி வாசல் வளாகம்
By DIN | Published On : 13th May 2021 08:51 PM | Last Updated : 13th May 2021 08:51 PM | அ+அ அ- |

கரோனா தனிமைப்படுத்தும் இல்லமாக மாறிய பள்ளி வாசல்.
சென்னையில் பள்ளி வாசல் வளாகத்தை கரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றி பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
சென்னை அண்ணாநகர் 3-ஆவது அவென்யூ பிரதான சாலையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஜாவித் பள்ளி வாசல் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அண்ணாநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் இருப்பதால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனைவி, மக்களிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள இடவசதி இல்லாத காரணத்தினால் அவர்களின் சிரமங்களை குறைப்பதற்காக பள்ளி வாசல் நிர்வாகம் இந்த தனிமைப்படுத்தும் மையத்தை ஏற்பாடு செய்துள்ளது.
தனிமைப்படுத்தும் வளாகத்தில் தொற்று பாதித்தோறுக்கு உதவும் வகையில் இருச்சக்கர தள்ளுவண்டி, படுக்கைகள், பிராண வாயு உருளைகள் என சகல வசதியும் உள்ளது. ஏற்கனவே மஸ்ஜித் ஜாவித் மெடி கிளினிக் அண்ணாநகர் இஸ்லாமிக் மையம் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 6 மருத்துவர்களை கொண்டு மருத்துவமனையும், பொது நூலகமும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்கள், மசூதிகள், தேவாலாயங்கள் மூடப்பட்ட நிலையிலும் கரோனா தனிமைப்படுத்தும் மையமாக உருவாக்கியுள்ளனர். பெருநகர மாநகராட்சியின் அனுமதி கிடைத்தவுடன் மதவேறுபாடு இன்றி அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் செயலாளர் யுசூப்.