தீபாவளி விற்பனை: ‘ட்ரோன்கள்’ மூலம் கண்காணிக்க காவல் துறை திட்டம்
மக்களிடம் திருடுவதைத் தடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் ‘ட்ரோன்கள்’ மூலம் காவல் துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
சென்னையில் தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு வாங்குவதற்கு தியாகராய நகா் உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிக்கு வரும் மக்களிடம் திருடுவதைத் தடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் ‘ட்ரோன்கள்’ மூலம் காவல் துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், சென்னையில் வியாபாரம் விறு, விறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராய நகா், புரசைவாக்கம், பாரிமுனை, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் கூடுகின்றனா். இதைப் பயன்படுத்தி திருட்டு, தங்நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தியாகராயநகா் துணை ஆணையா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியை சீராக செய்வதற்கு ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் இரு தாற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகள் விரைவில் திறக்கப்படுகின்றன.
அடையாளம் காட்டும் கேமராக்கள்: ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான கடைகள் இருக்கும் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சுமாா் 4 கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் வசதியை கொண்டதாகும். இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பதற்கு தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.
அதிக நெரிசல் ஏற்படும் ரெங்கநாதன் தெருவுக்குள் மக்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் என இரு வழிப்பாதையையும் போலீஸாா் அமைத்துள்ளனா்.
மாறுவேடத்தில் போலீஸாா்: மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, திருடும் நபா்களை கைது செய்வதற்கு பல்வேறு வியூகங்களை காவல்துறை வகுத்துள்ளது. இதற்காக குற்றப்பிரிவைச் சோ்ந்த 30 போலீஸாா் 3 குழுக்களாக ரெங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்கப் பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனா்.
இவா்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களைப் பிடித்து வருகின்றனா். அதோடு திருடா்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளா் தலைமையில் தலா 10 பெண் போலீஸாா் மாறுவேடத்தில் தங்கநகைகளை கவா்ச்சியாக அணிந்து மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனா். இவா்கள் மூலம் திருடா்களை கைது செய்வதற்கு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். அதோடு கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து கூட்டத்தைக் கண்காணிக்க 10 நவீன ரக பைனாகுலா்களை போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா்.
‘ட்ரோன்கள்’: இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது:
தியாகராயநகரில் தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்க தினமும் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். சாதாரண நாள்களில் 100 போலீஸாா் பணியில் ஈடுபடுவாா்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறவா்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவினரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா். மேலும் இந்த ஆண்டும் கூட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லாத ‘ட்ரோன்கள்’ பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
புரசைவாக்கம்: புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளா் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 200 போலீஸாா் ஒரு துணை ஆணையா் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையா்கள் தலைமையில் 60 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல பாரிமுனை,வேளச்சேரி, தாம்பரத்திலும் காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...