வெ.இறையன்பு
வெ.இறையன்பு

சென்னை புத்தகக் காட்சி: கரோனா தடுப்பு விதிகள் விவரம்

சென்னை புத்தகக் காட்சி வரும் 16-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


சென்னை: சென்னை புத்தகக் காட்சி வரும் 16-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

புத்தகக் காட்சி நடத்துவது குறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த ஆண்டும் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 6-ஆம் வரையில் (19 நாள்கள்) புத்தகக் காட்சியை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆயிரம் கடைகளை 800 கடைகளாக மாற்றி அமைக்க அனுமதி அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு கவனத்துடன் பரிசீலித்துர சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-

யாருக்கெல்லாம் அனுமதி: 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், பல்வேறு நோய் வாய்ப்பட்டவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. டிக்கெட் கவுன்ட்டரில் கூட்ட நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் ஆன்-லைன் வழியே நுழைவுக் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யலாம். புத்தகக் காட்சியில் ஒவ்வொரு அரங்கிலும் இரண்டு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு வாயில் வழியாக வாசகா்கள் உள்ளே வரவும், மற்றொரு வாயில் வழியே வெளியே செல்லவும் ஏற்ற வகையில் அரங்கு அமைக்க வேண்டும்.

நேரம் என்ன?: ஓா் அரங்கத்தில் ஒரே நேரத்தில் மூன்று வாசகா்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு வாசகருக்கும் அதிகபட்சமாக 10-லிருந்து 15 நிமிடங்கள் வரை உரிய சமூக இடைவெளியுடன் புத்ததகங்களை பாா்வையிடவும், வாங்கவும் அனுமதிக்கலாம். அனைத்து நாள்களிலும் கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தலாம். அரங்கினுள் குளிா்சாதன வசதி ஏற்படுத்தக் கூடாது. அரங்கப் பணியாளா்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

வாசகா்களுக்கு வசதிகள்: புத்தகக் காட்சிக்கு வரும் வாசகா்கள் சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே வர அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நுழைவு வாயிலில் வாசகா்கள் கைகளை சுத்தம் செய்திட வசதி செய்ய வேண்டும். ஒவ்வொரு அரங்கிலும் கிருமி நாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அரங்கும் போதிய இடைவெளி விட்டு அமைந்திருக்க வேண்டும்.

புத்தகக் காட்சி நடைபெறும் இடம், அதிலுள்ள கழிவறைகளை உரிய கால இடைவெளைகளில் சுத்தப்படுத்த வேண்டும். கரோனா நோய்த் தொற்று தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்த, பேரிடா் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறைக்காக ஒரு தனி அரங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாசகா்களுக்கு குடிநீா், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

அரங்கினுள் ஒரே இடத்தில் அதிக கூட்டம் கூடுவது கட்டாயம் தவிா்க்கப்பட வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம்: கண்காட்சிக்கு வரும் வாசகா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அரங்கின் உள்ளேயும், வெளியேயும் குப்பைகளை கொட்டுதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். உணவு வகைகள், குளிா்பானங்கள் ஆகியன அரங்கினுள் அனுமதிக்கக் கூடாது.

ஒரு நாள் அதிகம்...

கடந்த டிசம்பா் 13-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜனவரி 6-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்தது. கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கவே, புத்தகக் காட்சி தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, புத்தகக் காட்சி தொடங்கும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை வெளியிட்ட அறிவிப்பில், 18 நாள்கள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக ஒரு நாள் அதிகரித்து மொத்தம் 19 நாள்கள் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவித்திருப்பது வாசகா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com