பிப்ரவரி இறுதி வாரங்களில் சென்னையில் இப்படி நடப்பது அரிது

வரிசைகட்டி பல்வேறு வைரஸ்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறது.
பிப்ரவரி இறுதி வாரங்களில் சென்னையில் இப்படி நடப்பது அரிது
பிப்ரவரி இறுதி வாரங்களில் சென்னையில் இப்படி நடப்பது அரிது


சென்னை: கரோனா எனும் கோர அரக்கனிடமிருந்து சென்னை மக்கள் மீண்டு தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். அதற்குள், வரிசைகட்டி பல்வேறு வைரஸ்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறது.

வழக்கமான அளவைக் காட்டிலும் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவர்களைப் பார்க்கவும் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கிறார்கள். ரத்தப் பரிசோதனை கூடங்களும், மருந்தகங்களும் எப்போதும் கூட்டமாகவே உள்ளன.

நேரடியாக சுவாச மண்டலத்தைத் தாக்கும் வைரஸ், இருமலை ஏற்படுத்தும் வைரஸ், காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் என பல வைரஸ்கள் மெல்ல பரவி வருகிறது. வெறும் வைரஸ் காய்ச்சல் என்றும் விட்டுவிட முடியவில்லை. சிலருக்கு திடீரென ரத்தத்தில் சிவப்பு தட்டுகள் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. சிலருக்கு மருத்துவ சோதனையில் டெங்கு உறுதியாகிறது. சிலருக்கு சிக்குன்குனியா நோயும் தாக்குகிறது. வழக்கமாக, டிசம்பர், ஜனவரி மாதங்களில்தான் இந்த நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனுடன் இதர வைரஸ் தாக்கமும் அதிகமாகவே உள்ளது என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

பொதுவாக காய்ச்சலுக்கான மருந்துகளிலேயே நோயாளிகள் குணமடைந்து விடுகிறார்கள். சிலருக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தேவைப்படுகின்றன. காய்ச்சல் குறைந்தாலும் பலருக்கும் இருமல் பத்து நாள்களுக்கும் மேல் தொடர்வது வேதனை தரும் தகவலாக உள்ளது. காய்ச்சலுடன் சிலர் மயக்கம் உள்ளிட்டவற்றாலும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிப்ரவரி இறுதி வாரங்களில் இப்படி நடப்பது மிகவும் அரிது. ஏனென்றால் குளிர் குறைந்து வெப்பம் அதிகரிக்கும் காலம் இது. ஆனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு இரவில் குளிர் மற்றும் பனி அதிகமாக இருக்கிறது. விடிந்ததும் காலை 10 மணிக்கு வெயில் காய்ச்சியெடுக்கிறது. இதனால், வைரஸ்களின் பரவல் அதிகரிக்க எளிதாக இருக்கிறது. சென்னையின் ஒரு சில இடங்களில் டைபாய்டு காய்ச்சலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com