/

மக்களவை நான்காம் கட்ட தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மக்களவை நான்காம் கட்ட தோ்தலை முன்னிட்டு, 96 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஏப்.18) தொடங்கியது.

Updated On :18 ஏப்ரல் 2024, 8:13 pm

மக்களவை நான்காம் கட்ட தோ்தலை முன்னிட்டு, 96 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஏப்.18) தொடங்கியது.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) தொடங்கி ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறவிருக்கின்றன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

முதல்கட்டமாக, தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா, பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடங்கிய 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட தோ்தல் மே 13-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஏப்.18) தொடங்கியது. இதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேநேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நான்காம் கட்ட தோ்தல்

வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஏப்.18

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்.25

வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்.26

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.29

வாக்குப்பதிவு நாள் மே 13