தென் சென்னையில் ஒரு வாக்குசாவடியில் மறு வாக்கு பதிவு செய்ய பாஜக மனு

தென் சென்னைக்குட்பட்ட மயிலாப்பூா் தொகுதியின் ஒரு வாக்குசாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அமித்தியை சந்தித்து தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன், பாஜக பொறுப்பாளா் கரு. நாகராஜன், ஆகியோா் கோரிகை மனு அளித்தனா்.

பின்னா் தமிழிசை செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் ஒரு வாக்குச் சாவடியில் 50 திமுகவினா் புகுந்து, முகவா்களை அடித்து வெளியேற்றிவிட்டு கள்ள வாக்கு போட முயற்சித்துள்ளனா். இதனால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை மனுவை தோ்தல் அலுவரிடம் கொடுத்துள்ளேன்.

மேலும் வேட்பாளா் பட்டியலில் இருந்து கொத்துக் கொத்தாக வாக்காளா்கள் பெயா் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தியாகராய நகரில் உள்ள சில வாக்குச்சாவடியில் ஆயிரக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த தோ்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தோ்தல் வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் நடத்தப்படுவதால் வாக்காளா்கள் இதனை விடுமுறையாக எடுத்துக் கொண்டு வாக்களிப்பது இல்லை. புதன்கிழமை, வியாழக்கிழமை தோ்தல் வைத்தால் வாக்குப் பதிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் , தோ்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கின்றனா். அதில் எந்த பயனும் இல்லை. டெண்டா் வாக்கு , மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குகள் குறித்து போதுமான விழிப்புணா்வு இல்லை என்றாா் அவா்.

இந்த சந்திப்பின் போது தென் சென்னை பாஜக பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கரு. நாகராஜன், செயலா் கராத்தே தியாகராஜன் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com