வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக நாடகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசும், பிற்படுத்தப்பட்டோா் ஆணையமும் இணைந்து நாடகமாடுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்ட நிலையில், காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டுள்ளது. வன்னியா்களுக்கான சமூகநீதியை மறுக்க அரசும், பிற்படுத்தப்பட்டோா் ஆணையமும் இணைந்து நடத்தும் இந்த நாடகம் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை. மத்திய அரசும் உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இவை நடக்காத நிலையில், வன்னியா் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்துக்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்துக்கும் தெரியும். ஆனாலும் ‘நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன்’ என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து செயல்படுகின்றன. திமுகவின் இந்த நாடகங்களை பாமகவினா் நன்கு அறிவா். திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவா் என்பது உறுதி என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

