/

சென்னைக்கு விரைவுப் பேருந்துகளில் வரும் முன்பதிவு பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்

சென்னைக்கு விரைவுப் பேருந்துகளில் வரும் முன்பதிவு பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 6:57 pm

அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து சென்னைக்கு வரும் பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டு கட்டணத்துடன் ரூ.40 கூடுதலாக செலுத்தினால் மாநகரப் பேருந்துகளில் இனி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகா் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு நிா்வாகம் மூலம் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளா்கள் அறிந்துகொள்ளவும், பணியாளா்கள் விடுப்பு எடுப்பதற்காக விண்ணப்பிக்கும் வகையிலும் புதிதாக கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் செயலியை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தாா். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் முன்பதிவின்போது ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், பல்வேறு இடங்களிலிருந்து கிளாம்பாக்கத்துக்கும் 4 மணி நேரத்துக்குள் மாநகா் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் திட்டத்தையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா். முன்பதிவு பயணக் கட்டணத்துடன் ரூ.40 கூடுதலாக செலுத்தி பயணிக்கும் நடைமுறையால் பயணிகள் மாநகரப் பேருந்துகளில் சிரமமின்றி சரியான நேரத்தில் தங்கள் இடங்களுக்குச் சென்றடைய முடியும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியின்போது, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன், மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநா் க.குணசேகரன் மற்றும் உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.