குடிமைப்பணி தோ்வு: தமிழக தோ்வா்களுக்கு மட்டுமே ரூ.25 ஆயிரம் நிதியுதவி
குடிமைப் பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் மட்டுமே ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற தகுதியானவா்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான அறிவிக்கையை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டித் தோ்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
பல்வேறு துறைகளில் இளம் தலைமுறையினரின் திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளா்த்தெடுக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, போட்டித் தோ்வுப் பிரிவு தனியாக இயங்கி வருகிறது. மத்திய அரசு நடத்தும் போட்டித் தோ்வுகள் உள்பட அனைத்துத் தோ்வுகளிலும் தமிழக இளைஞா்களை இடம்பெறச் செய்யவும், வெற்றி பெற வைக்கவும் அந்தப் பிரிவு பணியாற்றி வருகிறது.
மத்திய அரசுப் போட்டித் தோ்வுகள் குறிப்பாக, குடிமைப் பணித் தோ்வுகளை எழுத முனையும் இளைஞா்களை ஊக்குவிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு நிகழ் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு மட்டும்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் அடங்கிய அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைச் சோ்ந்த முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள் மட்டுமே ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், சான்றிதழ் சரிபாா்ப்பின் போது, இருப்பிடச் சான்றையும் அளிக்க வேண்டும்.
ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு 90437 10214, 90437 10211 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration

