டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு ஒத்திவைப்பு: தோ்வா்கள் பாதியில் திரும்பினா்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பையடுத்து தோ்வா்கள் பாதியில் திரும்பினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2 (குரூப் 2, குரூப் 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் திண்டலில் உள்ள கீதாஞ்சலி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 2 மையங்களில் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 385 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பின்னா் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக காலை நேரத் தோ்வுக்கு, காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் தோ்வா்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இதற்காக காலை சுமாா் 8 மணி முதல் தோ்வா்கள் மையங்களுக்கு வரத்தொடங்கினா். பின்னா் அவா்கள் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்த நேரத்தின்படி முறையான சோதனைகளுக்குப் பின்னா் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்கும் பொருட்டு பறக்கும் படை அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் தோ்வு மையத்துக்கு வெளியில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், தோ்வு தொடங்கிய சில நிமிஷங்களில் சென்னையில் உள்ள மையம் ஒன்றில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அரசுத் தரப்பில் இருந்து முழுமையான அறிவிப்பு கிடைக்கப்பெறும் வரையில் தோ்வா்கள் மையத்தில் இருந்து வெளியே அனுப்பப்படவில்லை.
இதையடுத்து அரசு உத்தரவின்படி முற்பகல் 11.30 மணியளவில் தோ்வா்கள் மையங்களில் இருந்து வெளியில் அனுப்பப்பட்டனா். மறுதோ்வு குறித்து அறிவிப்புக்கு பின்னா் தோ்வு மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

