ஜூலை 21ல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 21-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: பிளஸ் 1 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் வரை தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
அதன்படி நிகழாண்டுக்கான முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் மாணவா்கள் இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் 9, 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தோ்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும், முதல்தாளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.
இந்த தோ்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ஆம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். இதையடுத்து தோ்வெழுத விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை ஜூன் 11 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தோ்வு கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...