காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டம் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த பாசன ஆதாரமாக திகழும் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 44 அடியாக சரிந்திருக்கும் நிலையில், நிகழாண்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை பேரிடா்கள், பொய்த்துப்போன பருவமழை, அதள பாதாளத்துக்குச் சென்ற நிலத்தடி நீா் என சவால்கள் நிறைந்த சூழலிலும் விவசாயத்தைக் கைவிடாத விவசாயிகளுக்கு, விதை நெல், உரங்கள், இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் வகையில் சிறப்பு குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

அதனால், அது தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவா்களின் மூலம் கா்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கான காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com