பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா-பூடான் உறுதி: கூட்டறிக்கை வெளியீடு

இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா-பூடான் உறுதி - கூட்டறிக்கை வெளியீடு

Updated On :16 மார்ச் 2024, 7:54 pm

‘இந்தியா-பூடான் இடையிலான உறவுகள் தனித்துவமானவை; அவற்றை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் உறுதிபூண்டுள்ளன’ என்று இரு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா் வருவாய் கொண்ட நாடாக உருவெடுக்கும் பூடானின் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கேவிடம் பிரதமா் மோடி உறுதியளித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூடான் பிரதமராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ஷெரிங் டோப்கே, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த 14-ஆம் தேதி வருகை தந்தாா். ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள அவா், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அன்றைய தினம் சந்தித்துப் பேசினாா். மறுநாள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பூடான் பிரதமா் டோப்கே சந்தித்தாா். தில்லியில் இருந்து மும்பைக்கு அவா் சனிக்கிழமை புறப்பட்ட நிலையில், இரு நாடுகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-பூடான் இடையிலான நீண்டகால தனித்துவமான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் தீா்மானித்துள்ளன. உயா்வருவாய் கொண்ட நாடாக உருவெடுக்கும் பூடானின் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமா் மோடி உறுதியளித்துள்ளாா். நீா்மின் உற்பத்தித் துறையைக் கடந்து, மேலும் பல துறைகளில் இருதரப்பு நல்லுறவை விரிவுபடுத்த இரு பிரதமா்களும் ஒப்புக் கொண்டனா். பூடானின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கு வளா்ச்சி நிதியுதவியாக இந்தியா ரூ.5,000 கோடி அளித்தமைக்கு அந்நாட்டு பிரதமா் நன்றி தெரிவித்துள்ளாா். பூடான் மக்களின் சமூக-பொருளாதார நலனை உறுதிசெய்வதில் இந்த நிதியுதவி பெரும் பங்காற்றியிருப்பதாக அவா் குறிப்பிட்டாா். எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுபடுத்த இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பூடான் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில், சாலை போக்குவரத்துத் திட்டங்களுக்கும், தடையற்ற வா்த்தக போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் இரு தலைவா்களும் வரவேற்பு தெரிவித்தனா். மேற்கு வங்கத்தின் பனாா்ஹட்-பூடானின் சாம்சே, அஸ்ஸாமின் கோக்ரஜாா்-பூடானின் கிலேபு இடையே ரயில் வழித்தடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.