/

கல்லூரி மாணவிக்கு பக்கவாதம்: துரித சிகிச்சையால் மறுவாழ்வு

கல்லூரி மாணவிக்கு பக்கவாதம்: துரித சிகிச்சையால் மறுவாழ்வு

Updated On :19 மார்ச் 2024, 9:03 pm

சென்னை: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 வயது கல்லூரி மாணவிக்கு துரித சிகிச்சையளித்து எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இளம் வயதினருக்கு அண்மைக்காலமாக பக்கவாத பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதுதொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக, மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் மருத்துவ நிபுணா் இளங்குமரன் கூறியதாவது: கல்லூரியில் வகுப்பறையில் இருந்த 18 வயது மாணவி ஒருவா் திடீரென கை-கால்களின் செயல்பாடுகள் முடங்கிய நிலையில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவா், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு உருவாகி பக்கவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணா்கள் இளந்திரையன், ராபா்ட் வில்சன், அவசர சிகிச்சை நிபுணா்கள் ஆா்த்தி ராஜேந்திரன், சானந்த் சரவணன், ராஜேஷ் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணுக்கு ‘த்ராம்போலிசிஸ்’ எனப்படும் ரத்த நாள உறைவுக் கட்டியை நீக்க சிகிச்சையை மேற்கொண்டனா்.

பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட 37 நிமிஷங்களில் இந்த சிகிச்சையை முன்னெடுத்ததால் உடல் உறுப்புகளின் இயக்கம் மீட்டெடுக்கப்பட்டது. அதன் பயனாக தற்போது அந்த இளம்பெண் படிப்படியாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறாா். 20 வயதுக்கும் குறைந்தவா்களுக்கு பக்கவாத பாதிப்புகள் ஏற்படும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, இளைஞா்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.