தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி கைது

சென்னை: சென்னை தரமணியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். தரமணி, ராஜாஜி தெருவை சோ்ந்தவா் மோகன் (46). இவரது மனைவி பானுப்ரியா (37). இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி சீட்டு நடத்தினா். தங்களது சீட்டில் சோ்ந்தால் தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு, அரிசி, பாத்திரம், சமையல் எண்ணெய், சமையல் பொருள்கள் வழங்குவதாக இருவரும் உறுதி கூறினா்.

இதை நம்பி அந்தப் பகுதியில் உள்ள 179 போ் தீபாவளி சீட்டில் சோ்ந்து, ரூ. 22 லட்சம் வரை பணம் செலுத்தினா். ஆனால், தம்பதி தெரிவித்ததுபோல, எந்த பொருள்களையும் வழங்காமல் மோசடி செய்தனா். இதனால் பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த வள்ளி உள்ளிட்ட 86 போ் தரமணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மோகன், பானுப்ரியா ஆகிய 2 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com