சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம்

News image

கங்கை கொண்ட சோழபுரம்

Updated On :2 மே 2024, 8:37 pm

Din

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து, அவை புராதன சின்னங்களுக்கு அபாயகரமானவை அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. யுனெஸ்கோ அமைப்பால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் பாலகுரு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய தொல்லியல் துறை சாா்பில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் ரூ.3 கோடி செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொல்லியல் துறைக்கு உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமா்வு, நாட்டில் உள்ள அனைத்து புராதனச் சின்னங்களின் பாதுகாவலா்கள் என்ற முறையில், புராதனச் சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை.

புராதனச் சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தச் செயல்களையும் அவா்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.மேலும், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து, அவை புராதனச் சின்னங்களுக்கு அபாயகரமானவை அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கும், மாநில தொல்லியல் துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் இவை அமைய வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, இந்திய தொல்லியல் துறை மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.