திருச்சியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில், அரியலூர் வழியாக கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில் உடையார்பாளையம் உள்ளது. பழைய ஜமீன்களில் உடையார்பாளையமும் ஒன்று. இவர்கள் 'கச்சி' என்னும் அடைமொழியை உடைய பெயரும், 'காலாட்கள் தோழ உடையார்' என்னும் பட்டப் பெயரையும் உடையவர்கள்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
உடையார்பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் அல்லது அரசு காவலர்களில் பலர் தமிழ், வடமொழியில் தேர்ச்சி பெற்று விளங்கினர். கோபால சாஸ்திரிகள், ராமா சாஸ்திரிகள், பூலோக கந்தர்வ நாராயணசுவாமி அய்யர், வீணைப் பெருமாளய்யர், கனம் கிருஷ்ணய்யர், தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் குடும்பத்தினர் என தமிழ்ப் புலவர்களையும் இசைக் கலைஞர்களையும் போற்றினர். உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்', 'நல்லுரைக்கோவை' நூல்களில் உடையார்பாளையம், அரியலூர் பாளையக்காரர்கள் குறித்த விவரங்கள் உள்ளன.
உடையார்பாளையம் பாளையக்காரர்கள் சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம், குருகை காவலப்பர் கோயில், ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள் போன்ற கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்பாளையம், மதனத்தூர், ஆனந்தவாடி என்னும் இடங்களில் அன்னசத்திரங்களைக் கட்டியுள்ளனர். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சிங்கமுகக் கேணி இவர்களால் கட்டப்பட்டது. அக்கோயிலின் விமானத்தின் மீதுள்ள பொன்முலாம் பூசப்பட்ட தூபியும் உடையார்பாளையம் ஜமீன்தாரால் அளிக்கப்பட்டது.
உடையார்பாளையம் புதுப்பணம்
இந்தப் பாளையக்காரர்கள் தங்களுக்கென்று 'செட்டியார்கூடம்' எனும் நாணயம் அடிக்கும் சாலையை வைத்திருந்தனர். இங்கிருந்து வெளியான காசு 'உடையார்பாளையம் புதுப்
பணம்' என அழைக்கப்பட்டுள்ளது. இதன் குறிப்புகள் சரஸ்வதி மகால் ஆவணங்களிலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் வாலஸ் துரை 1808-ல் அனுப்பிய குறிப்புகளிலும் காணப்படுகின்றன.
தனிப்பாடல்கள்
உடையார்பாளையம் அரசர்கள் மீது பல தனிப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. கச்சிரங்கப்ப உடையாரின் காலத்தில் திருப்புறம்பயம் பாலசரசுவதி சுப்பிரமணிக் கவிராயரும், சாருவாய்க் குமாரசாமிக் கவிராயரும் சமஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.
திருவாவடுதுறை ஆதீன வித்துவான்களாக இருந்த கந்தசாமி கவிராயர் என்பவர் கச்சிரங்கரின் மேல் ஒரு கோவை பாடியுள்ளார். பாலசரசுவதி சுப்ரமணிய கவிராயர் அவர் மீது பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். யுவரங்க பூபதி உடையார் குறித்த தனிப்பாடலும் உள்ளது.
பயறணிநாதர் கோயில்
உடையார் பாளையத்துக்கு 'பத்ராண்யம்', 'முற்கபுரி' என்ற பெயர்கள் உண்டு. இறைவனுக்கு 'பயறணிநாதர்' என்ற பெயரும், இறைவிக்கு 'நறுமலர்பூங்குழல் நாயகி' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
'வணிகன் ஒருவன் மிளகு மூட்டைகளை எடுத்துக் கொண்டு இவ்வூர் வழியே சென்றான். சுங்கச்சாவடியில் அவற்றை பயறு மூட்டைகள் எனக் கூறி குறைந்த வரியை செலுத்திவிட்டு ஊர் சென்று பார்த்தபொழுது, பயறு மூட்டைகளாகக் காட்சி அளித்தது. இவ்வூர் இறைவனை வேண்ட , மீண்டும் அவை மிளகு மூட்டைகளாக மாறியது. இதனால் இறைவனுக்கு 'பயறணிநாதர்' என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய மாயூர புராணத்தில் போற்றுகின்றார்.
கோயிலுக்கு முன்னர் பிள்ளையார் சந்நிதி உள்ளது. கோயில் கொண்டிருக்கும் விநாயகர் 'வில் வளைத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார். பிள்ளையார் வடிவம் சிறிய வடிவம்தான். தனது நான்கு கைகளில் மேற்கைகளில் அங்குசம் பாசம் ஏந்தியும், தனது கீழ் இரு கைளில் வில்லை வளைத்து பிடித்தும் கொண்டிருக்கிறார். எங்குமே காண இயலாத அரிய வடிவம். அர்ச்சுனனுக்கு 'காண்டீபம்' என்ற வில்லை வளைத்து தந்தமையால், 'வில்வளைத்த விநாயகர்' என வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் உள்ள குளத்துக்கு 'காண்டீப தீர்த்தம்' என்று பெயர். ஜமதக்னி என்ற முனிவரின் தவத்துக்குத் தவளைகள் சப்தம் இடையூறாக இருந்ததால் அவர் சாபம் இட்டதாக புராணவரலாறு கூறுகிறது. இன்னும் இக்குளத்தில் தவளைகள் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
பங்காரு காமாட்சி
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்த 'பங்காரு காமாட்சி' என்ற திருமேனியை பாதுகாக்கும் பொருட்டு இவ்வூர் கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அத்திருமேனி வைக்கப்பட்டிருந்தது 'காமாட்சி மண்டபம்' என அழைக்கப்படுகிறது.
உடையார்பாளையம் ஜமீன் பரம்பரையில் முத்து விஜயரங்கப்பக்காளாக்க தோழஉடையார் என்பவர் ஸ்ரீ பங்காரு காமாட்சி கோயிலில் அர்த்தசாமக்கட்டளையை ஏற்படுத்தினார். இவருக்கு 1784-இல் ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட காருகுறிச்சி கிராமத்தில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது.
காமாட்சி அம்மன் உடையார்பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததால் காஞ்சிபுரத்துக்கும், உடையார்பாளையத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த மகாதேவேந்திர சரசுவதி சுவாமிகளான சங்கராச்சாரிய சுவாமிகள் (1704-1746) உடையார்பாளையத்தில் தங்கியிருந்தார்.
மகா பெரியவர் காமகோடி சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் 1926-ஆம் ஆண்டில் உடையார்பாளையம் பயறணீசுவரர் கோயிலில் தங்கி 28 நாள்கள் பூஜை செய்தார். அவர் விஜயம் செய்தபொழுது ஒட்டகம், யானை, குதிரைப் படைகளுடன் பொதுமக்களுடன் இணைந்து பாளையக்காரர்கள் வரவேற்றனர். காண்டீப தீர்த்தக் குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் தியானம் செய்வார். அவர் பயன்படுத்திய படகு இன்றும் உள்ளது. காஞ்சிகாமகோடி பீடத்தின் ஆதரவுடன் 1990-இல் உடையார்பாளையம் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சி அத்திவரதர்
அந்நிய படையெடுப்புகளின் காரணத்தால் பேரருளாளன் சந்நிதிக்கு தீங்கு நேருமே என்று எண்ணி பெரிய பெருமாளை திரு அனந்த சரஸ் என்னும் குளத்தில் வைத்துவிட்டனர். பின் உற்சவத் திருமேனிகளை பாதுகாப்பின் பொருட்டு உடையார்பாளையத்தில் வைத்து 40 வருடங்களுக்கு மேல் வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர், உற்சவர் மூர்த்தி காஞ்சிபுரத்துக்கு வந்தார். வரதாஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் காணும் தெலுங்குக் கல்வெட்டால், ' உற்சவர் விரோதி வருடம், பால்குண மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், சனிவாரம், அமாவாஸ்யை திதி, விருஷப லக்கனம் அன்று காஞ்சிக்கு எழுந்தருளினார்' என்பதை அறியமுடிகிறது.
உடையார்பாளையத்தை ஆண்ட அரசர்கள் யுவரங்க பூபதி உடையார் சிறப்பாகப் போற்றப்படுகின்றார். தமிழிலும், வடமொழியிலும் சங்கீதத்திலும் புலமை பெற்றவர். இறைவி மீது 'நறுமலர்ப்பூங்குழல் நாயகி மாலை' என்ற இலக்கியத்தை இயற்றியுள்ளார்.
அரசர்களுடைய முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்ததால் 'கச்சி' என்னும் அடைமொழி இவர்களுடைய பெயருக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. விஜயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணைபுரிந்து வந்ததால் 'காலாட்கள் தோழ உடையார்' என்ற பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

