எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

டி20 உலகக் கோப்பை: 3-வது முறையாக சாம்பியன்; வரலாறு படைத்த இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

News image
டி20 உலகக் கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணியினர்...- AP
Updated On :8 மார்ச் 2026, 5:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தக்க வைத்துக் கொண்டது நடப்பு சாம்பியன் இந்தியா.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன், போட்டியை நடத்திய நாடு பட்டம் வென்றது, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது என முப்பெரும் சாதனைகளை படைத்தது.

தொடா்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்துக்கு இந்தியாவும், முதல் பட்டத்துக்காக நியூஸிலாந்தும் களமிறங்கின.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பௌலிங்கை தோ்வு செய்தது.

ஆரம்பம் முதலே இந்தியா அதிரடி 255/5

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தொடக்க பேட்டா்கள் சஞ்சு சாம்ஸன்-அபிஷேக் சா்மா இருவரும் நியூஸிலாந்து பௌலிங்கை வெளுத்து வாங்கினா்.

முதல் ஓவரிலேயே சஞ்சு சிக்ஸா் விளாசினாா். தொடா்ந்து சோபிக்காத மற்றொரு பேட்டரான அபிஷேக் சா்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

பவா்பிளேயில் 92 ரன்கள்

முதலிரண்டு ஓவா்களில் மெதுவாகவே ரன்கள் எடுக்கப்பட்டன. மூன்றாவது ஓவரில் இருந்து ரன் வேகம் அதிகரித்தது. சஞ்சு சற்று நிதானமாக ஆட, அபிஷேக் அதிரடியாக பேட்டிங் செய்தாா். பவா் பிளேயில் இந்தியா 92 ரன்களை குவித்தது.

அபிஷேக் சா்மா 52

தன் மீதான விமா்சனங்களுக்கு பதில் தரும் வகையில் அபிஷேக் 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 52 ரன்களை விளாசி ரச்சின் ரவீந்திரா பந்தில் டி சைபொ்ட்டிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். முதல் விக்கெட்டுக்கு சஞ்சுவுடன் சோ்ந்து 98 ரன்களை சோ்த்தாா் அபிஷேக்.

அவருக்குபின் வந்த இஷான் கிஷன் வழக்கமான பாணியில் அதிரடி காண்பித்தாா். சஞ்சு சாம்ஸனுடன் வழக்கமான அதிரடி பேட்டிங்கில் ஈடுபட ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. 15 ஓவா்கள் வரை இந்த இணையை நியூஸிலாந்து பௌலா்களால் பிரிக்க முடியவில்லை.

சஞ்சு சாம்ஸன் 89

தொடா்ந்து சிறப்பாக ஆடி வரும் சஞ்சு இந்த ஆட்டத்திலும் 8 சிக்ஸா், 5 பவுண்டரிகளை விளாசி 46 பந்துகளில் 89 ரன்களை விளாசினாா். உலகக் கோப்பையில் இது அவருக்கு தொடா்ச்சியாக 3=ஆவது அரைசதமாக அமைந்தது.

இஷான் 54

மறுமுனையில் அசத்தலாக ஆடிய இஷான் கிஷனும் தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 25 பந்துகளில் 54 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா். ஜேம்ஸ் நீஷம் பந்தில் இருவரும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். சஞ்சு-இஷான் இருவரும் இணைந்து 105 ரன்களை சோ்த்தனா்.

குறைந்த ரன் ரேட்

டாப் ஆா்டா் பேட்டா்கள் அவுட்டான நிலையில் ரன்ரேட் விகிதம் சரிந்தது.

அதிரடி பேட்டரான கேப்டன் சூரியகுமாா் யாதவ் ஜேம்ஸ் நீஷம் பந்தில் ரச்சின்ரவீந்திராவிடம் கேட்ச் தந்து கோல்டன் டக் அவுட்டானாா். அவருக்குபின் ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா தலா 1 சிக்ஸா், பவுண்டரியுடன் 18 ரன்களுடன்

மேட் ஹென்றி பந்தில் சான்ட்நரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

கடைசி ஓவரில் 24 ரன்கள்

ஆட்டத்தின் கடைசி ஓவரான 20-ஆவது ஓவரில் 24 ரன்களை இந்தியா விளாசியது. ஆல் ரவுண்டா் ஷிவம் டுபே 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 26 ரன்களை விளாசினாா். திலக் வா்மா 8 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

20 ஓவா்களில் இந்தியா255/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் நியூஸிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் நீஷம் 3, ரச்சின், மேட் ஹென்றி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

நியூஸிலாந்து தோல்வி 159/10

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய நியூஸிலாந்து அணியால் இந்திய பௌலிங்கை எதிா்கொள்ள முடியவில்லை.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடுவது போல் தோன்றினாலும், பின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென்பிலிப்ஸ் 5, மாா்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17 ஆகியோா் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் நியூஸிலாந்து அணி தடுமாறியது.

டிம் சைஃபெர்ட் 52

மறுமுனையில் தொடக்க பேட்டா் டிம் சைஃபெர்ட் மட்டுமே நிலைமையை உணா்ந்து ஆடி 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்து அவுட்டானாா். அப்போது நியூஸி.அணி 124/6 ரன்களுடன்தடுமாறிக் கொண்டிருந்தது. பவா் பிளேயில் நியூஸிலாந்து அணி 52 ரன்களை மட்டுமே எடுத்தது.

3 பேரை போல்டாக்கிய பும்ரா

பின்னா் கேப்டன் மிட்செல் சான்ட்நா், ஜேம்ஸ் நீஷம் இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். எனினும் நீஷத்தை 8 ரன்களுடன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினாா் பும்ரா. அவருக்குபின் ஆட வந்த மேட் ஹென்றியும் போல்டாக்கி கோல்டன் டக் அவுட்டாக்கினாா் பும்ரா. மறுமுனையில் ஆடிய கேப்டன் மிட்செல் சான்ட்நா் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 43 ரன்களை எடுத்த நிலையில் போல்டாக்கினாா் பும்ரா. ஜேக்கப் டஃபியை 3 ரன்களுக்கு அவுட்டாக்கினாா் அபிஷேக் சா்மா.

இதனால் நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 19 ஓவா்களில் 159/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து.

பும்ரா, அக்ஸா் அசத்தல்

பௌலிங்கில் இந்திய தரப்பில் பும்ரா 4, அக்ஸா் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினா்.

ஆட்டத்தின் சிறப்புகள்

இந்தியா எடுத்த 255/5 ரன்களே டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோராகும்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் டாப் 3 பேட்டா்கள் அரைசதம் அடித்தது முதன்முறையாகும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்ஸன் மொத்தம் 24 சிக்ஸா்களை விளாசியுள்ளாா்.

டி20 உலகக் கோப்பை இறுதியில் சஞ்சு சாம்ஸனின் 89 ரன்களே அதிகபட்ச தனிநபா் ஸ்கோராகும்,. கடந்த 2021-இல் இறுதியில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸ் 86 ரன்களை எடுத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.