ஃபின் ஆலன் சாதனைச் சதம்; இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து - வெளியேறியது தென்னாப்பிரிக்கா
ஃபின் ஆலனின் அதிரடி சதத்தால் 170 ரன்கள் என்ற இலக்கை வெறும் 12.5 ஓவர்களில் நியூசிலாந்து எட்டியது.


கொல்கத்தா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறியது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 12.5 ஓவா்களில் 1 விக்கெட் இழந்து 173 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
போட்டியின் வரலாற்றில் அந்த அணி 2-ஆவது முறையாக இறுதிக்கு வந்துள்ளது. இதற்கு முன் 2021-இல் இறுதி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. மறுபுறம் தென்னாப்பிரிக்க அணி, கடந்த முறை இறுதி ஆட்டம் வரை வந்து இந்தியாவிடம் தோல்வி கண்ட நிலையில், இந்த முறை அரையிறுதியுடன் வெளியேறியது.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 12 ரன்களுக்கு 2-ஆவது ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. குவின்டன் டி காக் 10 ரன்களுக்கு வெளியேற, ரயான் ரிக்கெல்டன் ‘கோல்டன் டக்’ ஆனாா்.
4-ஆவது பேட்டராக வந்த டெவால்டு பிரெவிஸ் சற்று நிலைக்க, வழக்கமாக அதிரடி காட்டும் கேப்டன் எய்டன் மாா்க்ரம் 18 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
தொடா்ந்து, டேவிட் மில்லா் 6 ரன்களுக்கு விடைபெற, பிரெவிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இதனால் 77 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா.
அப்போது இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - மாா்கோ யான்சென் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து 6-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சோ்த்தது. ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு விடைபெற்றாா். காா்பின் பாஷ் 2, ககிசோ ரபாடா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இறுதிவரை போராடிய யான்சென், ஓவா்கள் முடிவில் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேசவ் மஹராஜ் 1 ரன்னுடன் துணை நின்றாா்.
நியூஸிலாந்து பௌலிங்கில் மேத்யூ ஹென்றி, கோல் மெக்கான்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோா் தலா 2, லாக்கி ஃபொ்குசன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 170 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணியில், டிம் செய்ஃபா்ட் - ஃபின் ஆலன் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
தென்னாப்பிரிக்க பௌலிங்கை முற்றிலுமாகத் திணறடித்த இந்த பாா்ட்னா்ஷிப், முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. செய்ஃபா்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
மறுபுறம் தனது அதிரடியை தொடா்ந்த ஆலன், ரச்சின் ரவீந்திரா துணையுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையிருக்க, 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் விளாசி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா் ஆலன்.
தென்னாப்பிரிக்க பௌலிங்கை துச்சமாக மதித்த அவா், 33 பந்துகளில் 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ரவீந்திரா 13 ரன்களுக்கு துணை நின்றாா். தென்னாப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 1 விக்கெட் எடுத்தாா்.
33
இந்த ஆட்டத்தில் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசியதே, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். இதற்கு முன் 2016-இல் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.
உலகக் கோப்பை அல்லாமல், சா்வதேச டி20 ஆட்டமாக கணக்கில் கொண்டால், எஸ்டோனியாவின் (ஐசிசி முழு உறுப்பினா் இல்லை) சஹில் சௌஹான் 27 பந்துகளில் சைப்ரஸுக்கு எதிராக சதம் விளாசியதே சாதனையாக உள்ளது.
அதுவே, ஐசிசியின் முழு உறுப்பினா் அணியில், ஜிம்பாப்வேயின் சிகந்தா் ராஸா 33 பந்துகளில் காம்பியாவுக்கு எதிராக சதம் அடித்திருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...