ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மறக்க முடியாத தருணங்கள்! டி20 உலகக் கோப்பை சுவாரசிய நிகழ்வுகள்...

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற சுவாரசியங்களைப் பற்றி...

News image

2024 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில்...

Updated On :3 பிப்ரவரி 2026, 3:06 pm IST
Updated On :3 பிப்ரவரி 2026, 3:06 pm IST

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை நடந்த தொடர்களில் நிகழ்ந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

டெஸ்ட், ஒருநாள் என நீண்ட வடிவிலான போட்டிகளில் சிக்கிக்கொண்ட கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக குறைந்த ஓவர்களில் போட்டித் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு 20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

1ஸ்டூவர்ட் பிராடை போட்டுத்தாக்கிய யுவராஜ்!

அறிமுக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கிடம், சக இங்கிலாந்து வீரர் ஃபிளிண்டாப் வம்பிழுத்தார்.

இதன் விளைவாக ஆக்ரோஷமடைந்த யுவராஜ் சிங், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடை வெழுத்து எடுத்தார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பைத் தொடரில் 12 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய சாதனையையும் படைத்தார். அந்த ஆட்டத்தில் 16 பந்துகளில் 3 பௌண்டரி, 7 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டித்தூக்கியிருந்தார் யுவராஜ்.

அதே உலகக் கோப்பைத் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பரபரப்பான இறுதிப்போட்டியையும் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 158 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு கடைசி 4 பந்தில் 6 ரன் தேவையாக இருந்தது.

2இந்தியா - பாகிஸ்தான்

Listicle image

கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அணியை சரிவிலிருந்து மீட்ட மிஸ்பா உல்-ஹக் (4 சிக்சருடன் 43 ரன்கள்), வேகப்பந்துச்சாளர் ஜோகிந்தர் ஷர்மா வீசிய 3-வது பந்தை ஸ்டம்பை விட்டு நகர்ந்து லெக் திசைக்கு ஸ்கூப் ஷாட் அடிக்க, அதை ஸ்ரீசாந்த் லாவகமாக கேட்ச் செய்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலாவது உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது.

3பிராத்வெய்ட்டின் பிரம்மாண்ட சிக்ஸர்கள்!

Listicle image

2016-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டன.

அன்றையப் போட்டியில் கடைசி ஓவரைப் பார்க்காமல் யாராவது டிவியை அணைத்துவிட்டுச் சென்றிருந்தால் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றையும் அவர்களால் பார்க்காமல் தவறவிட்டிருப்பார்கள்.

இறுதி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். கடைசி ஓவரில் பத்து ரன்களுக்கு மேல் அடிப்பது, அதுவும் டி20 போட்டியில் மிகவும் சவால் நிறைந்தது. ஆனால், பதற்றமின்றி அதை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வெய்ட் முதல் 4 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சருக்கு தூக்கியடித்து பிரமிக்க வைத்தார்.

இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது முறையாக மகுடம் சூடியது. அந்த விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்த பிராய்த்வெய்ட்டுக்கு சில மாதங்களிலேயே கேப்டன் பதவியும் தேடிவந்தது.

4காவு வாங்கிய கத்துக்குட்டிகள்!

Listicle image

கத்துக்குட்டி அணிகள் மிகப்பெரிய அணிகளுக்கு சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் சில நேரங்களில் திகழ்வதும் உண்டு. முதலாவது உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் ஜிம்பாப்வேயிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியதும் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாகும்.

இதேபோல் 2009 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடக்க லீக்கில் இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் உதைவாங்கியது. 2022 ஆம் ஆண்டு தொடரில் நமீபியா அணி லீக் சுற்றில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் காவு வாங்கியது.

5பாகிஸ்தானை பதம்பார்த்த அமெரிக்கா!

கடந்த உலகக் கோப்பையில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தான் 84 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி அவர்களின் உலகக் கோப்பை கனவில் மண்ணை அள்ளிப் போட்டனர்.

6சூப்பர்மேன் சூர்யகுமார் யாதவ்!

Listicle image

2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் முதல்முறையாக அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், நியூயார்க்கில் நடந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவின் கனவைக் கலைத்து 2-வது முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது.

இதில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது டேவிட் மில்லர் (21 ரன்கள்) சிக்சர் நோக்கி பறக்கவிட்ட பந்தை எல்லைக்கோட்டின் விளிம்பில் துள்ளிகுதித்து சூர்யகுமார் கேட்ச் செய்து ஒட்டு மொத்த தேசத்தையும் மெய்சிலிர்க்க வைத்தார். இந்த கேட்ச்தான் பின்னாளில் அவருக்கு கேப்டன் பதவியை வாங்கி கொடுத்ததாகவும் இன்னும் பேச்சுகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

7லோக்கியின் மேஜிக்!

டி20 உலகக் கோப்பையில் எத்தனை சாதனைகள் வேண்டுமானாலும் படைக்கப்படலாம். ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசனின் சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வந்தால்தான் உண்டு.

கடந்த 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியான பாப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் அதாவது 24 பந்துகளை வீசிய லோக்கி பெர்குசன் அதில் ஒரு ரன், ஒரு எக்ஸ்ட்ரா ரன்கூட விட்டுக் கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.