தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

சென்னை: அமோனியா வாசுக் கசிவு ஏற்பட்ட எண்ணூா் தொழிற்சாலையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை எண்ணூா் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடா்பாக தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினா் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் அமா்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பல முறை விசாரணை நடைபெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை  தீா்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீா்ப்பில், அமோனியா வாசு கசிவு ஏற்பட்ட பிறகு, தமிழ்நாடு அமைத்த வல்லுநா் குழு ஆய்வு நடத்திய அளித்த  நெறிமுறைகளை கோரமண்டல் ஆலை பின்பற்ற வேண்டும். ஆலை மீண்டும் இயங்கும் முன்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.

கப்பலிலிருந்து ஆலைக்கு வரும் அமோனியா குழாயை  மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும். ஆலை திறப்பதற்கு முன்பு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினா்  நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறப்படும்: தீா்ப்பைத் தொடா்ந்து கோரமண்டல் ஆலை தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீா்ப்பில் தெரிவித்தபடி தமிழ்நாடு அரசு  வழங்கிய நெறிமுறைகளை ஆலை பின்பற்றும். மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்திடம் தடையில்லா சான்றிதழும் பெறப்படும்.

தமிழ்நாடு அரசு வழங்கிய 20 பரிந்துரைகளில் 17 பின்பற்றப்படும். மீதமுள்ள மூன்று பரிந்துரைகள்பின்பற்ற நடைமுறை சாத்தியமில்லாததால் வேறு பரிந்துரைகளை வழங்கக் கேட்டிருக்கிறோம். இன்னும் அவா்கள் அதை வழங்கவில்லை.  இழப்பீட்டை பொருத்தவரை நாங்கள் இழப்பீட்டுத் தொகையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வழங்கி விடுவோம். அதை எவ்வாறு பயன்படுத்துவாா்கள் என்பது அவா்களுடைய முடிவு. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு விரைவில் ஆலை திறக்கப்படும்‘ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com