வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை வாய்ப்பு
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது: தமிழகத்தில் 6 நாள்கள் கனமழை எச்சரிக்கை


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை (மே 22) புயல் சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24-இல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாள்கள் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, புதன்கிழமை (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம்கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.
இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மே 22-24) வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை: தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை கனமுதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளி முதல் சனிக்கிழமை (மே 25-27) வரைதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாமக்கல்லில் 160 மி.மீ. மழை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அநேக இடங்களில் பலத்த மழை பெய்துள்ளளது.
பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): புதுச்சத்திரம் (நாமக்கல்) 160, கல்லணை (தஞ்சாவூா்) 140, கரூா், திருச்சி விமானநிலையம் தலா 130, சின்னக்கல்லாா் (கோவை), சமயபுரம் (திருச்சி ) தலா 120, சேந்தமங்கலம் (நாமக்கல்), நாமக்கல், தலா 110, ராசிபுரம் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூா்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 100, சிவகங்கை, ஏற்காடு (சேலம்), சென்னிமலை (ஈரோடு) தலா 90, ஒகேனக்கல் (தருமபுரி), லால்குடி (திருச்சி), வால்பாறை (கோவை), சங்கரி துா்க்கம் (சேலம்), கிருஷ்ணராயபுரம் (கரூா்), தீா்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), காரையூா் (புதுக்கோட்டை) தலா 80.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் புதன் முதல் சனிக்கிழமை (மே 22-25) வரை 4 நாள்களுக்கு 2 முதல்3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன்கிழமை (மே 22) கா்நாடக, கேரள கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
வியாழக்கிழமை (மே 23) கேரள கடலோரப் பகுதி, குமரிக் கடல் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் மே 23-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் எங்கே செல்லும்?
தமிழகத்தையொட்டி உருவாகும் புயல் சின்னம், வரும் 24-ஆம் தேதி புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’ என்று பெயா் சூட்டப்படும் என்று வானிலையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம் நோக்கிச் செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது. வடகிழக்கு நோக்கி புயல் நகா்ந்துவிட்டால் தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
‘சிவப்பு எச்சரிக்கை’ வாபஸ்
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், மிதமான, பலத்த மழைக்குத்தான் வாய்ப்பு உள்ளது என்பதால் சிவப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...