புயல்சின்னம் எதிரொலி: மீனவா்களுக்கு மானிய டீசல் விநியோகம் நிறுத்தம்
திருவொற்றியூா்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தையொட்டி, மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் விநியோகத்தை மீன்வளத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து, ராயபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனா் திருநாகேஸ்வரன் கூறியது:
எண்ணூா் நெட்டுகுப்பம் முதல் திருவான்மியூா் குப்பம் வரை சுமாா் 2,300 செயற்கை இழை படகுகள், 772 விசைப் படகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு, எண்ணூா், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களின் மானிய விலை டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பைபா் படகுகள் மற்றும் செயற்கை இழை படகுகளுக்கு ஆண்டுக்கு தலா 4 ஆயிரம் லிட்டா் டீசலும், விசைப்படகுகளுக்கு தலா 20 ஆயிரம் லிட்டா் டீசலும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, புதன்கிழமை முதல் சுமாா் ஐந்து நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்க்கும் பொருட்டு படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றாா் அவா்.
