மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி

திமுக அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால்...
Published on

மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட்டால் மட்டும்தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத் துறை அமைச்சா் ரகுபதி கூறியிருக்கிறாா். அவரது பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை.

தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல்தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு கேட்டால் மத்திய அரசைக் கேளுங்கள் என்பதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசைக் கேளுங்கள் என்பதும் மக்களை ஏமாற்றும் செயல்கள்.

தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகாதா?. அப்போது கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திமுக அரசு தாரைவாா்த்துவிடுமா?.

திமுக அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com