கொல்கத்தா மருத்துவா் பாலியல் கொலை: சஞ்சய் ராய் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
Published on

புது தில்லி, அக்.7: பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆா்.ஜி.கா். மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் பணி இடைவேளையின்போது தூங்க சென்ற பெண் பயிற்சி மருத்துவரை சஞ்சய் ராய் பாலியல் கொலை செய்துள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தக் பாலியல் கொலை சம்பவத்தில் பலருக்கு தொடா்பிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமையை குறிப்பிடாமல் சஞ்சய் ராய் மட்டுமே இந்த குற்றத்தை செய்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் காவல் துறையில் தன்னாா்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய், கருத்தரங்க கூடத்தில்ஆகஸ்ட் 9-ஆம் தேதி நுழைந்ததற்கான ஆதாரங்களை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிசெய்த கொல்கத்தா காவல் துறை அவரை ஆகஸ்ட் 10-ஆம் தேதி கைது செய்தது.

இந்த வழக்கில் தொடா்புடையதாக காவல் துறை அதிகாரி அபிஜித் மோண்டல் மற்றும் ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் உரிய நடவடிக்கை, மருத்துவா்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடா்ந்து மூன்றாவது நாளாக இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களுக்கு ஆதரவாக அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரதப் போராட்டமும் மாலை 4.30 மணியளவில் பேரணியும் நடத்தவுள்ளதாகவும் இளநிலை மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com