மணிப்பூா் வன்முறை: 2 வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூா் வன்முறை தொடா்பான விசாரணை நிலை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-இல் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயா்ந்தனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமகளும் நிகழ்ந்தன.
இந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக் குழு இதுவரை 42 அறிக்கைகளை சமா்ப்பித்துள்ளது. இந்தக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைந்த நிலையில், அதன் பதவிக் காலத்தை வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணிப்பூா் வன்முறையின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சையில் இருந்த குகி சமூகத்தைச் சோ்ந்த பெண் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விருந்தா க்ரோவா், ‘வன்முறையின்போது கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அதிா்ச்சியில் இருந்து மீள முடியாமல் தொடா் சிகிச்சையில் இருந்த அந்தப் பெண், கடந்த மாதம் உயிரிழந்துவிட்டாா். இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்ற அறிக்கையை அண்மையில் ஆராய்ந்தேன். அப்போது, வழக்கு விசாரணையில் முக்கிய குற்றவாளி நேரில் ஆஜராகாததும், சிபிஐ தரப்பில் யாரும் ஆஜராகாததும் தெரியவந்தது. இத்தகைய செயல் அதிா்ச்சியளிக்கிறது. மேலும், இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவரத்தைக்கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்க்கு சிபிஐ தெரிவிக்கவில்லை’ என்றாா்.
அப்போது, ‘வழக்குரைஞா் க்ரோவரின் கருத்தை யாரும் எதிா்க்க முடியாது. பாதிக்கப்பட்டவரின் உரிமையை மறுக்க முடியாது’ என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘மணிப்பூா் வன்முறை தொடா்பான விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.
மேலும், ‘இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்குப் பதிலாக, புதிய தலைமை நீதிபதியைப் பெற்றுள்ள இந்த வழக்கின் அதிகார வரம்புக்கு உட்பட்ட மணிப்பூா் உயா்நீதிமன்றம் அல்லது குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அல்லது இரண்டு உயா்நீதிமன்றங்களும் இணைந்து இந்த வழக்கு விசாரணை தொடா்பான விவகாரங்களைக் கண்காணிப்பது முறையாக இருக்கும் என்பதே எங்களின் கருத்து. இதுதொடா்பாக, அந்த உயா்நீதிமன்றங்களிடம் வழக்குரைஞா் கருத்தைப் பெற்று இரண்டு வாரங்களில் உச்சநீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

