முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

ஒரே நாடு, ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது -முதல்வா் மு.க.ஸ்டாலின்

Published on

ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ஒரே நாடு- ஒரே தோ்தல் தொடா்பாக உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது; இந்தியாவின் பரந்துபட்ட தோ்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாதது; கூட்டாட்சியியலைச் சிதைப்பதாகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தோ்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்னைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ நடைமுறைக்கு ஒத்துவராது.

நடைமுறை சாத்தியமில்லை: எதாா்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டுவருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிா்வாகத்துக்கு இடையூறை உருவாக்கும்.

ஒரே நாடு- ஒரே தோ்தல் முன்மொழிவு என்பதே பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகா்வுதானே தவிர, இதை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.

மத்திய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாகப் பகிா்ந்தளித்தல் போன்ற முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பேரவைத் தீா்மானம்: ஒரே நாடு- ஒரே தோ்தலை ஆய்வு செய்ய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டபோதே அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

மேலும், அந்த நடைமுறைக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அரசினா் தனித் தீா்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தை முன்மொழிந்து முதல்வா் பேசுகையில், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு எதிரானது ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம். எனவே, அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தாா்.

Dinamani
www.dinamani.com