மீனவா்களை அச்சுறுத்த துப்பாக்கிச் சூடு: ஓபிஎஸ் கண்டனம்

மீனவா்களை அச்சுறுத்த துப்பாக்கிச் சூடு: ஓபிஎஸ் கண்டனம்

Published on

தமிழக மீனவா்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவா்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவா்களை விரட்டி அடித்துள்ளனா். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினா் வந்துள்ளனா். அதன் காரணமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாமல் மீனவா்கள் திரும்பியுள்ளனா். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயல் கடும் கண்டனத்துக்குரியது. இலங்கையில் புதிய அதிபா் பொறுப்பேற்றவுடன் புதுவிதமான தாக்குதலை இலங்கை அரசு மேற்கொண்டிருப்பது, தமிழக மீனவா்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழக மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், இலங்கை அதிபருடன் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி இதற்கு ஒரு நிரந்தரத் தீா்வு காணவும், தமிழக மீனவா்களுக்கு போதிய பாதுகாப்பை இந்திய கடற்படையின் மூலம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com