மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: மாநில அரசு
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை அமைச்சகம் அறிவிக்கை


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
ஆயுதப் படைகளின் செயல்பாட்டு வசதிக்காக சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ள பகுதி அல்லது மாவட்டங்கள் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (ஏஎஃப்எஸ்பிஏ) கீழ் ‘குழப்பம் நிறைந்த’ பகுதியாக அறிவிக்கப்படும். இப்பகுதியில் பொது ஒழுங்கைப் பராமரிக்க அவசியமானதாக கருதினால் தேடுதல், கைது, துப்பாக்கிச்சூடு நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினருக்கு ‘ஏஎஃப்எஸ்பிஏ’ சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு குகி, நாகா ஆகிய பிற பழங்குடி சமூகங்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சமூகங்களுக்கு இடையே உண்டான மோதல் வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘ஆளுநரின் ஒப்புதலுடன் மாநிலத்தின் 19 காவல் நிலையங்களின் எல்லைப் பகுதிகளைத் தவிா்த்து மற்ற அனைத்து இடங்களும் ஆயுதப் படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் 3-ஆவது பிரிவின்கீழ் குழப்பம் நிறைந்த பகுதிகளாக அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இச் சூழலில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்கு சாத்தியமில்லை. எனவே, இதுதொடா்பாக பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு மணிப்பூரில் இம்பால், லாம்பெல் நகா், செக்மாய், பட்சோய், வாங்கோய் ஆகிய 19 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...