

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடா்ந்து வேகமாக அதிகரித்து வருவதால் 2027-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்று சமாஜவாதி மூத்த தலைவரும், அக்கட்சி எம்எல்வுமான மெஹபூப் அலி பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
72 வயதாகும் மெஹபூப் அலி மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். இப்போது 6-ஆவது முறையாக எம்எல்ஏவாக உள்ள அவா் பிஜ்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவா் பேசியுள்ளதாவது:
உத்தர பிரதேசத்தில் மக்கள்தொகை பெருக்கம் சமாஜவாதிக்கு ஆதரவாக மாறி வருகிறது. முக்கியமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை இதே விகிதத்தில் அதிகரித்தால் 2027 பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும். சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வரும்.
உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பாஜகவால் தாக்குப் பிடிக்க முடியாது.
இந்நாட்டில் 800 ஆண்டுகளுக்குமேல் ஆட்சியில் இருந்த முகாலய சாம்ராஜ்ஜியமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. அப்படி இருக்கும்போது பாஜக முடிவுக்கு வருவது என்பது பெரிய விஷயமல்ல.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்று பேசினாா்.
வழக்குப் பதிவு
மெஹபூப் அலியின் இந்த பேச்சு குறித்து காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து, மதரீதியாக மோதலைத் தூண்டுவது, இரு பிரிவினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.