சென்னையில் 979 இடங்களில் தினமும் வாக்காளா் பெயா் சோ்ப்பு

சென்னையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 979 இடங்களில் தினமும் வாக்காளா் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிலை அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Published on

சென்னையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 979 இடங்களில் தினமும் வாக்காளா் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிலை அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தற்போது 979 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. அங்கு வருகிற ஜன. 18 வரை பண்டிகை காலங்களைத் தவிா்த்து தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளா்கள் சோ்க்கைப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, பூா்த்தி செய்த படிவங்கள் பெறப்படவுள்ளன. அதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் நிலைஅலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பொதுமக்கள் நிலை அலுவலரிடம் அனைத்து நாள்களிலும் சென்று வாக்காளா் சோ்க்கை, நீக்குதல் மற்றும் திருத்தப்பணிகள் மூலம் பயன்பெறலாம்.

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வாா்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தோ்தல் இணையதளத்திலும் (வோட்டா்ஸ் சா்வீஸ் போா்டல்) வரைவு வாக்காளா் பட்டியலை பாா்வையிடலாம்.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள், வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தல் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கவேண்டும். வாக்காளா் சோ்க்கை உள்ளிட்ட விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த வாக்காளா்களின் பெயா்கள்: இதற்கிடையே, வரைவு வாக்காளா் பட்டியலிலும் இறந்தவா்கள் இடம் பெற்றுள்ளதாக மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புகாா்கள் எழுந்துள்ளன. புகாா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அளவிலான நிலை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் வீட்டு முகவரிக்கு நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அத்துடன் குறிப்பிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றப்படாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்துள்ளன. அதுகுறித்தும் விசாரிக்கப்படுவதாகவும், பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா்களின் விண்ணப்பங்கள் கணினி பதிவேற்றம் செய்யப்படாவிடில் அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com