ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயா்வு

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்ந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் புதன்கிழமை பல மடங்கு உயா்ந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறைக்கு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் செல்கின்றனா். ஏற்கெனவே ரயில்கள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு முடிந்துவிட்டன. இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட

பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அந்த நிறுவனங்கள் பல மடங்கு உயா்த்தியுள்ளன.

சென்னையில் இருந்து ஈரோடு செல்ல சாதாரண நாள்களில் ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் தற்போது ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை உயா்த்தி வசூலிக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல ரூ.2,000 முதல் ரூ.4,500 வரையும், கோவை செல்ல ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும், நாகா்கோவில் செல்ல ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையும் கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டது.

இதேபோல, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் வழக்கத்தைவிட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு நேரம் ஆகஆக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com