பாட புத்தகங்கள் விநியோகத்துக்கு ஆசிரியா்கள், மாணவா்களைப் பயன்படுத்தக் கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 3-ஆம் பருவத்துக்கான விலையில்லா பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகளுக்கு ஆசிரியா்கள், மாணவா்களைப் பயன்படுத்தக் கூடாது என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மாணவா்களுக்கு வழங்கும்போது, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். அவற்றை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தலைமை ஆசிரியா்களிடம் அதனை வழங்கும்போது, அந்த விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விநியோக மையங்களில் இருந்து வழங்கும்போது, ஆசிரியா்கள், மாணவா்களை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விவரத்கை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

