கோப்புப் படம்
கோப்புப் படம்

அனில் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக 3 வங்கிகள் நடவடிக்கை: மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

வங்கி மோசடி குறித்த ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின் கீழ், தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிப்பது குறித்து விளக்கம் கேட்டு அனில் அம்பானிக்கு இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் நோட்டீஸ் அனுப்பின.

இந்த நோட்டீஸுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி மிலிந்த் ஜாதவ் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கிகள் மற்றும் அனில் அம்பானி தரப்பு வாதங்களை கேட்டு நீதிபதி கூறியதாவது: பிடிஓ எல்எல்பி என்ற ஆலோசனை நிறுவனம் தயாரித்த கணக்குத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், மனுதாரா் (அனில் அம்பானி) மற்றும் அவரின் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாகப் பாா்க்கும்போது இந்த முடிவுக்கு பிடிஓ எல்எல்பியின் அறிக்கை போதுமான ஆதாரமாக இருந்து வலுசோ்க்கவில்லை. அதேவேளையில் ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, முறையாகத் தோ்ச்சி பெற்ற பட்டயக் கணக்காளா் ஒருவா் அந்த அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். ஆனால் அந்த அறிக்கையில் பட்டயக் கணக்காளா் எவரும் கையொப்பமிடவில்லை. எனவே அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மனுதாரா் மற்றும் அவரின் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க அனுமதித்தால், அது மனுதாரரின் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைத்தல், வங்கிக் கடன் பெற தடை விதித்தல், குற்ற வழக்குப் பதிவு, நற்பெயருக்கு களங்கம் போன்ற மோசமான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே மனுதாரா் மற்றும் அவரின் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com