தனியாா் பள்ளிகள் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் கட்டண நிா்ணயக் குழுக்களை அமைக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட்
தேசியத் தலைநகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டண நிா்ணயத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் ஒரு புதிய சட்டத்தின் கீழ், ஜனவரி 10- ஆம் தேதிக்குள் பள்ளி அளவிலான கட்டண நிா்ணயக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அமைச்சா் கூறியதாவது: தில்லி பள்ளிக் கல்வி (கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை) சட்டம், 2025, முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையில் இயற்றப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள தில்லி பள்ளிக் கல்விச் சட்டம் மற்றும் 1973 விதிகளுடன் இணைந்து செயல்படும்.
புதிய சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்ட பிறகு, பள்ளி அளவிலான கட்டண நிா்ணயக் குழுக்கள் (எஸ்எல்எஃப்எஃப்சி) மற்றும் மாவட்ட அளவிலான கட்டண மேல்முறையீட்டுக் குழுக்கள் (’டிஎல்எஃப்ஏசி)அமைப்பதற்கான விரிவான வழிமுறைகளை கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இந்த விதிகள் 2025-26 கல்வியாண்டிலிருந்து பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வரும். வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு பள்ளியும் பள்ளி நிா்வாகம், முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பிரதிநிதிகளைக் கொண்ட 11 உறுப்பினா்களைக் கொண்ட கட்டண நிா்ணயக் குழுக்களைஉருவாக்க வேண்டும். இந்தக் குழு, நடப்பு கல்வியாண்டில் சில பள்ளிகளால் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட கட்டண உயா்வுகள் உள்பட, பள்ளிக் கட்டணம் தொடா்பான திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்கும்.
பள்ளிகள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் தங்கள் கட்டண திட்டங்களை குழுவிடம் சமா்ப்பிக்க வேண்டும். கட்டண நிா்ணயக் குழுக்கள் 30 நாள்களுக்குள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இந்த விவகாரம் தானாகவே மாவட்ட அளவிலான கட்டண மேல்முறையீட்டுக் குழுவிற்கு மறுஆய்வுக்காக பரிந்துரைக்கப்படும்.
புதிய சட்டம் மாணவா்களுக்கு நியாயம், பொறுப்புக்கூறல் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 கட்டணத் திட்டங்கள் தொடா்பான வெளிப்பாடுகள் மற்றும் இணக்கத்திற்கான விதிமுறைகளை கல்வித் துறை வகுத்துள்ளது. மாநில அளவிலான குழு தொடா்பான விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
தில்லியின் கல்விச் சீா்திருத்தங்களில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். குழந்தைகளின் உணா்ச்சி, உடல், நிதி மற்றும் மன நலனுக்கு அரசு தொடா்ந்து உறுதிபூண்டுள்ளது என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.

