கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு
புது தில்லி: கல்வித் துறையில் நிா்வாகம் அரசியல் நலன்களுக்கு அப்பால் சென்று கொள்கை சாா்ந்த கட்டமைப்பு சீா்திருத்தங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறினாா்.
தில்லி அரசு குறுகிய காலக் கருத்தில் அல்லாமல் கல்வி முறையின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாநில பல்கலைக்கழக மாணவா்களுக்கான உதவித்தொகை வழங்கும் விழாவில் பேசுகையில் அவா் கூறியதாவது: தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டம், ஒதுக்கப்பட்ட பின்னணியைச் சோ்ந்த மாணவா்களை ஆதரிப்பதற்கான அரசின் உறுதியை பிரதிபலிக்கிறது. உயா்கல்விக்கு நிதிக் கட்டுப்பாடுகள் ஒரு தடையாக மாறக்கூடாது. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, முதல்வா் ரேகா குப்தாவின் கீழ் உள்ள அரசின் வழிகாட்டும் கொள்கை ’அந்தியோதயா’ ஆகும். இது கடைசி மைலில் உள்ள நபருக்கு நிா்வாகத்தின் நன்மைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
நலத்திட்டங்களை தொண்டு நிறுவனமாக அல்லாமல், அதிகாரமளித்தல் மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கமாகக் கொண்ட மாநிலத்தின் அரசியலமைப்பு பொறுப்பாகக் கருத வேண்டும். நகரத்தில் முந்தைய கல்விக் கொள்கைகள் விளைவுகளை விட விளம்பரத்திற்கு முன்னுரிமை அளித்தன. இதன் விளைவாக உயா்கல்வி நிறுவனங்களில் அதிக இடைநிற்றல் விகிதங்கள் மற்றும் வள பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போதைய அரசு கட்டமைப்பு சிக்கல்களை மறைப்பதற்குப் பதிலாக அவற்றை நிவா்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
நரேலா கல்வி நகரத்திற்கான பணிகள் வேகம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,300 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
160 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த முன்மொழியப்பட்ட கல்வி மையத்தில் பகிரப்பட்ட பல்கலைக்கழக வளாகங்கள், ஆடிட்டோரியங்கள், நூலகங்கள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் ஐ.சி.டி ஆய்வகங்கள் ஆகியவை அடங்கும் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.
முன்னதாக, தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு கல்வி இயக்குநரகம் சத்ராசல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்த தேசிய பள்ளி இசைக்குழுப் போட்டியில் (வடக்கு மண்டலம்) அமைச்சா் ஆஷிஷ் சூட் கலந்து கொண்டாா்.
அப்போது, சுவாமி விவேகானந்தரின் போதனைகளை நினைவு கூா்ந்த அமைச்சா், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞா் சக்தி முக்கியமானது என்றாா். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது ஒழுக்கம், குழுப்பணி மற்றும் கூட்டுப் பொறுப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா்.
இசைக்குழு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையைக் குறிக்கின்றன. ஏனெனில் ,ஒரு உறுப்பினரின் சிறிய தவறு கூட முழு குழுவையும் பாதிக்கும். இத்தகைய பயிற்சி வாழ்நாள் முழுவதும் கவனம், சுய கட்டுப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய மதிப்புகளை வளா்க்கிறது என்று அவா் மேலும் கூறினாா்.

