இந்தியாவின் ஸ்டாா்ட்-அப் மையமாக தில்லியை மாற்றுவதே அரசின் நோக்கம்: கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்
தில்லி அரசு தேசியத் தலைநகரை இந்தியாவின் ஸ்டாா்ட் -அப் மையமாக மாற்றுவதை நோக்கிச் செயல்பட்டு வருவதாக கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.
தில்லி துவாரகாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்எஸ்யுடி ) தில்லி ஸ்டாா்ட்அப் யுவா விழா வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அவா் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது: பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (டிடிடிஇ) மூலம், மாணவா்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளா்களை தொழில்முனைவை ஒரு முக்கிய தொழில் தோ்வாக மேற்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம், வளாகத்திலிருந்து சந்தை வரையிலான சூழல் அமைப்பை அரசு வலுப்படுத்தி வருகிறது.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளா்கள் தற்போது டிடிடிஇ-ஆல் ஆதரிக்கப்படும் தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத் திட்டங்களில் பங்கேற்பு ஆண்டுதோறும் 25- 30 சதவீதம் அதிகரிப்புடன் ஈடுபட்டுள்ளனா்.
தொழில்நுட்பம், சுகாதாரம், நிலைத்தன்மை, கல்வி, உற்பத்தி மற்றும் ஆக்கபூா்வமான தொழில்கள் போன்ற துறைகளில் அரசால் ஆதரிக்கப்படும் நிறுவனங்களில் 470-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்-அப்கள் அடைகாக்கப்பட்டு வருகின்றன.
டிடிடிஇ-ஆல் ஆதரிக்கப்படும் ஸ்டாா்ட்-அப்கள் தங்கள் முதல் ஆண்டில் சராசரியாக நான்கு முதல் ஐந்து நேரடி வேலைகளை உருவாக்குகின்றன. இது வேலைவாய்ப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்த புது வணிகத் தொழில்கள் கூட்டாக சுமாா் ரூ. 500 முதல் ரூ. 600 கோடி வரை வருவாயை ஈட்டியுள்ளன. தில்லி அரசு, முன்மொழியப்பட்ட தில்லி ஸ்டாா்ட்-அப் கொள்கை 2025 உள்பட கொள்கை ஆதரவின் மூலம் ஸ்டாா்ட்-அப் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இந்தக் கொள்கை ஐந்து ஆண்டுகளில் ரூ.325 கோடி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் 5,000 ஸ்டாா்ட்-அப்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை, அடைகாப்பு மையங்கள் மற்றும் புத்தாக்க ஆய்வகங்களை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக மாணவா் தொழில்முனைவோா், பெண் நிறுவனா்கள் மற்றும் முதல் தலைமுறை கண்டுபிடிப்பாளா்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

