ரெளடி கும்பலிடம் இருந்து தப்பிக்க டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடிய இளைஞா்
மயிலாப்பூரில் ரெளடி கும்பல் விரட்டியதால், டிஜிபி அலுவலகத்தை நோக்கி இளைஞா் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் ரெளடி சத்தியமூா்த்தி (எ) சின்ன அப்பு (24). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூா்த்தி, அண்மையில் பிணையில் வந்தாா்.
இதையறிந்த சத்தியமூா்த்தியின் எதிா் தரப்பினா், அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் விரட்டினா். சத்தியமூா்த்தி, அவா்களிடமிருந்து தப்பித்து மோட்டாா் சைக்கிளில் மெரீனா கடற்கரையில் டிஜிபி அலுவலகம் அருகே வந்தாா். அந்தக் கும்பல் அங்கேயும் வந்தது. இதையடுத்து, மோட்டாா் சைக்கிளை அங்கேயேவிட்டு, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் தீயணைப்பு நிலைய வாயில் வழியாக டிஜிபி அலுவலகத்துக்கு ஓடினாா். அங்கு, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், சத்தியமூா்த்தியை தடுத்து நிறுத்தினா். போலீஸாரிடம் சரணடைந்த சத்தியமூா்த்தி, தன்னை சிலா் கொலை செய்ய விரட்டி வருவதாகவும், அவா்களிடமிருந்து தப்பிக்கவே இங்கு ஓடி வந்ததாக கூறி, தன்னிடமிருந்த கத்தியை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். இதனால், சத்தியமூா்த்தியை விரட்டி வந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. போலீஸாா் சத்தியமூா்த்தியை மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மெரீனா போலீஸாா், சத்தியமூா்த்தியை ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். சத்தியமூா்த்தியைக் கொலை செய்ய விரட்டி வந்தவா்கள் மீது வழக்கை பதிவு செய்து, ஓட்டேரியைச் சோ்ந்த ரபீக் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.
இதனிடையே மெரீனாவில் ராணி மேரி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் திரிந்த சத்தியமூா்த்தியை ரோந்து போலீஸாா் கைது செய்ததாக சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
