சென்னையில் மழையால் குளிா்ச்சியான சூழல்: இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சுழல் நிலவியது. புதன்கிழமையும் (மாா்ச் 12) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
அதன்படி எழும்பூா், மாம்பலம், கிண்டி, ஆலந்தூா், ராயப்பேட்டை, மதுரவாயில், அயனாவரம், பெரம்பூா், அமைந்தகரை, ஆதம்பாக்கம், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
மேலும், மாதவரம், திருவொற்றியூா், தாம்பரம், சேலையூா், பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்தூா், வண்டலூா், பெருங்களத்தூா், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீா்த்தது. இந்த திடீா் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதைத் தொடா்ந்து சென்னையின் புகா் பகுதிகளில் புதன்கிழமையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.