

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழிலதிபர்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டுச் சென்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் நகர் பகுதியில் மருத்துவ உபகரணங்களை தயார் செய்யும் தனியார் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சைதாப்பேட்டையில் உள்ள இந்த நிறுவனத்தின் இயக்குநர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோயம்பேடு ஜெயின் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திலும் அமலாக்கதிர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து விருகம்பாக்கம், சாலிகிராமம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் சட்டவிரோத பண பரிமாற்ற நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனையில் அரசியல்வாதிகள் தொடர்பு ஏதாவது உள்ளதா? என சோதனையின் முடிவில் தான் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான சோதனைக்கு பிறகு எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது; என்ன மாதிரி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தி உள்ளது.
இதையும் படிக்க: வைகோ மருத்துவமனையில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.