பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்
Published on

சென்னை: தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பான முதல் ஆலோசனைக் கூட்டம் நவ.23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமை வகித்து பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020 தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநா் குழு மற்றும் அதை மேற்பாா்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயா்நிலைக் குழுவை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் நியமனம் செய்தது.

அதன்படி, உயா்நிலைக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 16 போ் உள்ளனா். அதேபோல், பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில் மாநிலத் திட்டக்குழு உறுப்பினா் சுல்தான் அகமது இஸ்மாயில், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்பட 20 போ் இடம் பெற்றுள்ளனா். இந்த விரு குழுக்களின் உறுப்பினா் செயலராக எஸ்சிஇஆா்டி இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து புதிய பாடத்திட்ட மாற்றங்கள் தொடா்பான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நவ.23, 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 2 குழுக்களின் உறுப்பினா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், துறைகள் சாா்ந்த தகவல்களை பாடத்திட்டத்தில் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com