யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளோம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

"தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறோம்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

News image
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற "திங்க் எடியு கான்க்ளேவ் 2026' இரண்டாவது நாள் நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப் பரிசு வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா. உடன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். 
Updated On :3 மார்ச் 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

"தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறோம்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் "திங்க் எடியு கான்க்ளேவ் 2026' (14-ஆம் ஆண்டு) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. இதன் இரண்டாவது நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்: தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இந்தியா மட்டுமன்றி ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் படித்து வருகின்றனர். "அனைவருக்கும் ஐஐடி' திட்டத்தில் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர். உலகத்தின் எந்த மூலையிலும் சென்று இயங்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்துள்ளோம். மாநிலக் கல்விக் கொள்கை மிக வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வேர் போன்றது; ஆங்கிலம் பாலம் போன்றது. ஆங்கிலம் கற்பதில் சிரமங்களைச் சந்தித்தால், அறிவியல் அறிவைப் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படும். அதேவேளையில் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும்போது பரந்த அளவிலான அறிவைப் பெற முடிகிறது. ஒவ்வொரு மாணவரும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் கல்வியின் நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாகவே காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்வைதா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சுத்திதானந்தா: நமது சமூகத்தில் வெறும் தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல கல்வி. நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்களை நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் கற்ற கல்வி பயனடையும்.

கல்வியால் ஒரு மனிதனின் கோபம், சோகம், காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அனைவரும் தியானம் செய்ய வேண்டும்.

நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களை புரிந்துகொள்ள மூளையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த மூளையை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். யோகாவுடன் சேர்ந்த கல்வி முறையே சிறந்த கல்வி முறையாகும். மனதைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்வதன் மூலம், வாழ்க்கையின் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. புத்தாக்க நிறுவனங்களில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் சாத்தியமில்லை எனக் கூறினர். ஆனால், அதை இந்த அரசு சாதித்துக் காட்டியது.

முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு: எந்தப் பணியாக இருந்தாலும் அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுவது மன நிறைவைத் தரும். குடிமைப் பணி அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தால் கட்டாயம் மிகப்பெரிய வளமான சமூகத்தை உருவாக்க முடியும். அரசுத் தேர்வுகளுக்குத் தயாராவோரில் இயன்றவரை முயற்சி செய்தும் தேர்ச்சி பெற இயலாதவர்கள் தனியார் துறைகளுக்குச் செல்கின்றனர். குடிமைப் பணித் தேர்வுகளின்போது அவர்கள் பெற்ற அனுபவம் தனியார் துறையிலும் உதவும்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அதிக இளைஞர்கள் இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி புறக்கணிக்கப்படவில்லை. ஹிந்தி கற்கவில்லை என எனக்கும் வருத்தம் உள்ளது. நான் தெலங்கானா ஆளுநராக இருந்தபோது தெலுங்கு கற்றுக்கொண்டு அந்த மாநில பழங்குடி மக்களைச் சந்தித்தேன்.

புதிய மொழியைக் கற்பது அறிவுபூர்வமானது. மூன்றாவது மொழி வேண்டாம் என்றால், தனியார் பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை: அரசின் திட்டங்கள், கொள்கைகள் உருவாக்கத்திலும் அவற்றை அமல்படுத்துவதிலும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு இன்றியமையாதது. சோர்வடைந்துவிடாமல் குடிமைப் பணித் தேர்வுக்கு நன்கு பயிற்சி பெற்று தயாராக வேண்டும். இத்தேர்வுகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு: தாய்மொழியில் பேசுகிறோம். மற்றவர்களுக்கு கருத்துகளைப் பரிமாற ஆங்கிலம் பேசுகிறோம். அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கருத்துகளைப் பரிமாற உதவுகிறது. ஹிந்தியை அறிந்துகொள்வதற்கான தேவை என்ன? மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை. கல்விக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட்: இந்தியாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதைவிட, கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வியுடன், ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். மாணவர்கள் தற்போது சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், சுதந்திரத்துடன் வரும் பொறுப்புகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி பொறுப்பற்ற சமுதாயத்தை உருவாக்குவது நமக்கு பயனளிக்காது. ஆகவே, பயனுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இதில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தெலங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, கர்நாடக உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், நாளந்தா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுனைனா சிங், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்யா, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, பிகார் பாஜக எம்எல்ஏ மைதிலி தாகூரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

வளர்ச்சியடைந்த பாரதம் கல்வியால் சாத்தியம்: மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ்

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு கல்வியால் சாத்தியமாகும் என்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்தபோஸ் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் "திங்க் எடியு கான்க்ளேவ்' நிகழ்வில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது: உலகில் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். வாழும் வரை கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி கசப்பானது. ஆனால், அதன் பலன் இனிமையானது.

தற்சார்பு இந்தியா என்ற முன்னெடுப்புடன் வரும் 2047 -இல் வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கல்வியின் மூலமாகவே சாத்தியமாகும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, சமூக அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி: செயற்கை நுண்ணறிவு(ஏஐ), சாட்ஜிபிடி போன்றவற்றில் மற்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட மொழி மாதிரிகளைப் பயன்படுத்துகின்றோம். உலகளாவிய அளவுகோல்கள் நாட்டின் மொழியியல், கலாசார பன்முகத்தன்மையை பிரதிபலிக்காமல் போகும். நாட்டில் நிலையான, இறையாண்மை கொண்ட ஏஐ அமைப்புகளை உருவாக்குவது அவசரத் தேவை. இதற்கு சிப் உற்பத்தி, கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் வரை உள்நாட்டு கணினித் திறன்களை உருவாக்க வேண்டும் என்றார்.