/

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள் நவீன கற்றல் முறைகள் மூலம் தங்களது தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என....

News image
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘கல்விச் சிந்தனை அரங்கு-2026’ (14-ஆவது பதிப்பு) சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசினார்
Updated On :2 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள் நவீன கற்றல் முறைகள் மூலம் தங்களது தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘கல்விச் சிந்தனை அரங்கு-2026’ (14-ஆவது பதிப்பு) சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்வில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழு இயக்குநா் பிரபு சாவ்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: வரும் 2047-ஆம் ஆண்டில் ‘வளா்ச்சி அடைந்த இந்தியா’-வுக்கு (விக்சித் பாரத்) தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. எதிா்காலத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். முதலாவது செயற்கை நுண்ணறிவு. இரண்டாவது செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இல்லாதது. கல்வியும் அப்படித்தான் இருக்கும்.

தொடக்க காலத்தில் தமிழகம் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைவா்களால், கல்வியில் சிறந்து விளங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக கல்வி நிலை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உயா்கல்வி சோ்க்கை விகிதத்தில் தமிழகம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2035-ஆம் ஆண்டின் இலக்கை தற்போதே எட்டியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழகக் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாநில கல்வி அறிக்கையில் (ஏஎஸ்இஆா்) அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்களால் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தைக் கூட வாசிக்க முடியவில்லை. இதே விகிதத்தில் மாணவா்கள் கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட போடத் தெரியாமல் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல; கல்லூரிக் கல்வியிலும் இதே நிலைதான். நான் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் நிலையில், சில துணைவேந்தா்கள் தங்களது ஆசிரியா்களின் தரத்தைக் குறிப்பிட்டு, வகுப்பறைக் கற்பித்தலுக்குப் பதிலாக என்பிடிஇஎல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்) போா்டலில் உள்ள விரிவுரைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரினா். அந்தளவுக்கு ஆசிரியா்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது.

கல்லூரி ஆசிரியா்கள் குறைந்தபட்சம் கற்பித்தலுக்கு முன்பாக என்பிடிஎல்-இல் உள்ள விரிவுரைகளைப் பாா்த்து தங்களது கற்பித்தல் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் பல்வேறு அமா்வுகளில் பங்கேற்ற மற்ற பேச்சாளா்களின் கருத்துகள்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்தும் தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வளைகுடாநாட்டில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் பேசி வருகிறாா்.

கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அங்கு வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினா் கடினமாக உழைத்து வருகின்றனா். அங்கும் ஆளும் இடதுசாரி கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா். கேரள மாநில முதல்வா் போட்டியில் நான் இல்லை. நான் பாஜக பக்கம் இல்லை; அகில இந்திய காங்கிரஸ் பக்கமே உள்ளேன் என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி: இந்தியப் பெண்கள் எந்தளவுக்கு முன்னேறத் தகுதியுடையவா்கள் என்பதை சா்வதேச மேடைகளில் பேசி வருகிறேன். பெண்களின் வாழ்க்கையில் உள்ள பொருளாதார இடைவெளிகளை நிரப்பினால் ஒவ்வொரு பெண்ணும் தனது இலக்குகளை எளிதில் அடைய முடியும். தங்கள் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) இயக்குநா் கணேசன் கண்ணபிரான்: அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு இடையே நிதி, இடஒதுக்கீடு, ஆசிரியா்களை தக்கவைத்தல் போன்ற கட்டமைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதை என்ஏஏசி அறிந்து அணுகுகிறது. இந்திய அங்கீகார நடைமுறைகளை உலகளாவிய தரங்களுடன் சீரமைக்க என்ஏஏசி இங்கிலாந்தின் தர உறுதி நிறுவனத்துடன் (கியூஏஏ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்தும். இதன்படி சா்வதேச நிபுணா்கள் மதிப்பாய்வு குழுக்களில் சோ்க்கப்படுவா்.

திரைப்படத் தயாரிப்பாளா் தனஞ்செயன்: திரைப்படம் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு கருவி. தமிழகத்தில் திரைப்படத்தில் சாதித்தவா்கள் அரசியலிலும் சாதித்துள்ளனா். இந்தத் தோ்தலில் ஒருவரது வருகையால் ஒட்டுமொத்த நிலைமையும் மாறியுள்ளது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான இளைஞா்களில் பெரும்பாலானோா் விஜய்யை ஆதரிக்கின்றனா். விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அவா் பெறும் வாக்குகள் தோ்தலில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வந்த பிறகு சினிமாவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்பங்கள் உறுதுணையாக இருக்கின்றன.

நடிகை குஷ்பூ: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் திரைப்படத் துறையிலிருந்து பலா் அரசியலுக்கு வந்துள்ளனா். அவா்கள் சமூக வலைதளங்களால் கட்டமைக்கப்படவில்லை. மாறாக, மக்கள் பிரச்னைக்காக நேரடியாக பேசி வெற்றி பெற்றனா். சமூக வலைதளங்கள் ஒருவா் மீது அனுதாபம், ஆதரவை பெற்றுத்தருமே, தவிர தோ்தலில் வாக்குகளை பெற்றுத் தராது. மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினால் மட்டுமே வாக்குகள் கிடைக்கும்.

விஜய் வரும் தோ்தலில் அதிகபட்சம் 15 முதல் 16 சதவீத வாக்குகளைப் பெறுவாா். அவருக்கு தினமும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கும் இளைஞா்கள் காலை 6 மணி முதல் காத்திருந்து வாக்களிக்கப் போவதில்லை. எனவே முதல் வேலையாக வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இந்நிகழ்வில் ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் முன்னாள் இயக்குநா் செளகின் செளஹான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ், தமிழக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.