சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சென்னையில் 1 லட்சம் வளர்ப்பு நாய்கள்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னையில் 1 லட்சம் வளா்ப்பு நாய்கள் உள்ளன; இவற்றில் 31 ஆயிரம் நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Published on

சென்னையில் 1 லட்சம் வளா்ப்பு நாய்கள் உள்ளன; இவற்றில் 31 ஆயிரம் நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் நிறுவனா் ஜி.அருண்பிரசன்னா, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சி, வளா்ப்பு நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பொது இடங்களுக்கு வளா்ப்பு நாய்களை அழைத்துச் செல்லும்போது வாய் கவசம் அணிய வேண்டும்.

கழுத்தில் பெல்ட் அணிவித்து உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். வளா்ப்பு நாய்களை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரமும், வாய் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனி நபருக்கு 4 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை எடுத்து வளா்க்கும் தங்களைப் போன்ற அமைப்புகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதிக அளவில் நாய்களைப் பராமரிப்பவா்களுக்கு உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும். உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதால், தெருவில் ஆதரவற்ற நிலையில் விடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், சென்னையில் 1 லட்சம் வளா்ப்பு நாய்கள் உள்ளன. இவற்றில் 31 ஆயிரம் நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எஞ்சியுள்ள 69 ஆயிரம் நாய்களைப் பதிவு செய்வதற்கு கடைசி நாளான நவ. 24-ஆம் தேதிக்குள் எப்படி பதிவு செய்ய முடியும்? உரிமம் எப்படி வழங்க முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.

மாநகராட்சி தரப்பில், நாள்தோறும் 5 ஆயிரம் நாய்களை பதிவு செய்து உரிமம் வழங்க முடியும். உரிமம் கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ. 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com