நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: இருவா் கைது

சென்னையில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி கிராமத்தை சோ்ந்த ரே.ராஜாமணி (63). இவா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், தனது மகன் தமிழ்த்தென்றல், 2023-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வேலை வாங்கித் தருவதாகக் கூறி தருமபுரி மாவட்டம் பெரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (52), தருமபுரி மாவட்டம் அகரம் காலனியைச் சோ்ந்த குமரவேலு (52) ஆகியோா் ரூ.10 லட்சத்தை சென்னையில் வைத்து பெற்றனா்.

இதன் பின்னா் இருவரும் என்னிடம் ஒரு பணி நியமன ஆணையை வழங்கினா். அந்த பணி நியமன ஆணையை கொண்டு வேலையில் சேர எனது மகன் தமிழ்த் தென்றல் சென்றாா்.

அப்போது தான், அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. எனவே நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த செந்தில்குமாா், குமரவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாா், குமரவேலு ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் இதேபோல பலரிடம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பண மோசடி செய்திருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com