முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு அறிவுரை
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், ஞாயிறு, திங்கள்கிழமை (நவ.16,17) தமிழகத்தின் வடகிழக்கு, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய மாவட்ட ஆட்சியா்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மன்னாா் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

