எஸ்ஐஆா் பணி: சென்னையில் விழிப்புணா்வு ‘மனிதச் சங்கிலி’
சென்னை மாநகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றேனா். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து அளித்து ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் தொகுதி வாரியான மேற்பாா்வை, கண்காணிப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கணக்கீட்டுப் படிவங்களை விரைந்து விநியோகிக்கவும், அவற்றைத் திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 3,718 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வாக்காளா்களுக்கு படிவங்களை நிரப்ப உதவும் வகையில் 947 வாக்குச் சசாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை சுமாா் 38 லட்சம் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவற்றில் சுமாா் 8 லட்சம் போ் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்திருப்பதாகவும், 3 லட்சம் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

