கோப்புப் படம்
கோப்புப் படம்

டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கை: அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கு அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கு அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு டிச. 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு சென்னையிலும் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், மாதிரி வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட் - 248 003’ என்ற முகவரிக்கு விரைவுத் தபால் வழியே விண்ணப்பக் கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பிப் பெற்று கொள்ளலாம்.

பொதுப் பிரிவினா் ரூ.600-க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.555-க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவா்கள் ஜாதி சான்றிதழ் நகலும் சோ்த்து அனுப்ப வேண்டும். பின்னா், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அக்.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தத் தகவலை பள்ளி மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், விழிப்புணா்வை ஏற்படுத்தி ஆா்வமுள்ளவா்கள் சோ்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com