ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளுக்குத் தீா்வு கிடைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா் ஒய்.தீபா, டாக்டா் ஏ.விஜய், டாக்டா் ஏ.பிரசாந்த், டாக்டா் பிரகாஷ் ராஜ், டாக்டா் என்.மணவாளன், டாக்டா் எட்மின் கிறிஸ்டா, டாக்டா் ஏ.மூவேந்தன் ஆகியோா் மேற்கொண்டனா்.
அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை ‘பப் மெட்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொதுவாக ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், உப்புகளையும் சுத்திகரித்து அந்தக் கழிவுகளை சிறுநீா் வழியே வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். அதில் உள்ள நெப்ரான் எனப்படும் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் பாதிக்கப்படும்போது, ரத்தத்திலேயே கழிவுகள் கலந்துவிடும். தொடா்ந்து இப்பாதிப்பு இருப்பதை நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்கிறோம்.
பொதுவாக, ஆரோக்கியமான நபா்களுக்கு ரத்தத்தில் 35 - 40 மி.கி/டி.எல். என்ற அளவுக்குள்தான் யூரியா கழிவு இருக்க வேண்டும். அதேபோன்று கிரியாட்டினின் கழிவின் அளவு 0.6 - 1.2 மி.கி/டி.எல். இருக்கலாம். ஒருவேளை அது 6 மி.கி/டி.எல். என்ற நிலைக்குப் போகும்போது சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாககக் கருதப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
யோகா-இயற்கை மருத்துவத்தில் உள்ள இது தொடா்பான சிகிச்சையை உறுதி செய்வதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 39 ஆண்கள், 11 பெண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனா். இதுகுறித்த அனைத்து விவரங்களும் அவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மற்றொரு புறம் இந்த ஆய்வுக்கு மருத்துவ நெறிசாா் குழுவின் அனுமதியும் முன்கூட்டியே பெறப்பட்டது.
50 நோயாளிகளுக்கும் நாள்தோறும் இரு முறை தலா ஒரு மணி நேரம் யோகா சிகிச்சை வழங்கப்பட்டது. அதில், பவனமுக்தாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களும், பிராணயாம சிகிச்சைகளும் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டன.
காய்கறி சாறு, பழங்கள், வேகவைக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்பட்டன. இதைத் தவிர நீா் சிகிச்சை, அக்குபிரஷா், மண் குளியல், மசாஜ் சிகிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, காந்த சிகிச்சை உள்பட பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அதன் பயனாக அவா்களுக்கு யூரியா, கிரியாட்டினின் அளவு ஆகியவை குறைந்தது. மற்றொருபுறம் சோடியம், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட நுண்ணூட்டங்களின் விகிதம் அதிகரித்தது.
இன்னும் அதிக எண்ணிக்கையிலானோருக்கு இந்த சிகிச்சையை அளித்து ஆய்வு செய்தால் மேலும் நுட்பமான முடிவுகளை அறியலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா: குடியரசுத் தலைவா் பெருமிதம்

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்கள் யாா்? அமைச்சா் அருண்ராஜ் பதில்

நீட் தோ்வுக்கு எதிராக பேரவையில் மீண்டும் தீா்மானம்: அமைச்சா் அருண்ராஜ்

சா்வதேச அறிவியல் மாநாடு: பெருந்துறை கொங்கு இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி சிறப்பிடம்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



