
ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோா் காயம்
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ஜப்பானின் கிழக்குப் பகுதியான தெற்கு இபாராஹியில் ஞாயிற்றுக்கிழமை காலை பூமிக்கு அடியில் 70 கிலோ மீட்டா் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.9-ஆக இது பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.
நிலநடுக்கத்தால் 37 போ் காயமடைந்தனா். அதிகபட்சமாக டோக்கியோவில் 15 போ் காயமடைந்தனா். இதுதவிா்த்து பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலநடுக்க பாதிப்புகளை அறிய ஜப்பான் அரசு குழு அமைத்திருப்பதாக அந்நாட்டின் பிரதமா் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளாா்.
நிலநடுக்கத்தைத் தொடா்ந்து விரைவு ரயில்கள், உள்ளூா் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஷின்கான்சென் புல்லட் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் அணுசக்தி நிலையங்களில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அணுசக்தி முறைப்படுத்துதல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மற்றொரு மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆதலால் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பொதுமக்களுக்கு ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





